Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்தல்
செல்மா பிரியதர்ஷன்

சம்பவம்: 1

நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் லீனா மணிமேகலையிடமிருந்து தொலைபேசி அழைப்பு. தமிழ் நாட்டிலுள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரி ஒரு கண்டன கவிதைப் போராட்டத்தை நடத்தலாம். ஓப்பாரி போராட்டம் என அதற்குப் பெயரிடலாமா?

தொடர் நிகழ்வு

கவிஞர்கள் சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம், நரன் உடனிணைந்து தமிழில் எழுதிவரும் நவீன கவிஞர்களின் தொலைபேசி எண்களை சேகரித்தோம். மாவட்டந்தோறும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுள்ளவர்கள், குழுக்கள், தனியர்கள் என சாத்தியப்பட்டவரை அனைவரிடமும் தொலைபேசி கருத்து கோரப்பட்டது. ஏதாவது செய்தாக வேண்டும். ஒப்பாரிப் போராட்டம் என்பது சரிதான். கவிஞர்கள் வேறு என்ன செய்வது? ஒப்பாரி என்றால் செத்த பிணங்களுக்கு முன் அழுவது மட்டுமில்லையே. ஒப்பாரி என்பது ஒரு கதை சொல்லும் முறை. வரலாறைச் சொல்லலாம். இறந்த பிணங்களைக் காட்டி காரணமானவர்களை குற்றம் சுமத்தலாம். கோரிக்கையிடலாம், அழலாம், ஆர்ப்பரிக்கலாம், கோபப்படலாம், சாபமிடலாம், தூற்றலாம்.

thamizhachi இல்லை. இதில் உடன்பாடில்லை. இது போராட்ட வடிவமில்லை. என்ன ஒப்பாரி? கவிஞர் என்பவர் மூக்கு வழிய அழுது கண்ணீர் சிந்துபவரா? இது அவ்வளவு அரசியல்பூர்வமாக இல்லை. துல்லியமாக வெகு காத்திரமான போராட்டமாக இருக்க வேண்டும்.

சரி. கண்டன கவிதைப் போராட்டம் என்று அறிவிப்போம். அதற்குள் ஒப்பாரி பாடுபவர்கள் பாடிக்கொள்ளட்டும். பரணி, எதிர்பரணி பாடுபவர்கள் பாடட்டும்.
எழுத்தாளர்கள், கலைஞர்களையும் உள்ளடக்கி விரிவடைந்த போராட்டமாக அறிவிக்கலாமே?

தமிழகத்தில் எண்ணிக்கையில் கவிஞர்கள் அதிகம். மேலும் அவர்களுக்கான பொது மேடை அதிகமாக இல்லை. அனைத்துக் கவிஞர்களின் குரல்களும் ஒலிக்கப்படவேண்டும். உரைகளை தவிர்த்துவிட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரது ஆதரவையும் கோருவோம். பத்திரிக்கைகளுக்கு தகவல் அளிப்போம்.

டிசம்பர் 6 வரை

கவிதைப் போராட்டம் குறித்து கவிஞர்கள் பேசிக்கொண்டார்கள். அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளும் பலருடனும் பேசிய வண்ணம் இருந்தனர்.

அவரை இன்னும் அழைக்கவில்லை

என்னை இன்னும் அழைக்கவில்லை

இல்லை. இது தனியொருவர் நடத்தும் நிகழ்ச்சியோ, குடும்பவிழாவோ இல்லை, சேகரித்த, தொடர்பு கொள்ள முடிந்த அனைத்து எண்களையும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் பெற்றவர்கள் அவர்களோடு தொடர்பிலுள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. செய்தி எட்டியவர்கள் தொடர்பில் உள்ளவர்களோடு களத்திற்கு வரட்டும்.

போராட்ட அறிவிப்பு

இது யார் நடத்தும் போராட்டம்
கவிஞர்கள் இணைந்து நடத்தும் போராட்டம்
நாம் நடத்தும் போராட்டம்
தலைநகரில் வசிக்கும் லீனா மணிமேகலை தமிழச்சி, குட்டிரேவதி, தமிழ்நதி, இன்பா சுப்ரமணியம், வெளிரெங்கராஜன், ஐயப்ப மாதவன், ஆனந்த், நரன், கென் ஆகியோர் அடிக்கடி சந்தித்து ஆயத்தப்பணிகளை செய்தனர்.
இந்த டிசம்பர் 6 பயங்கரவாதிகளின் நாச வேலைகளுக்கு சென்னைதான் இலக்கு என்ற செய்தி பரவலாக பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் வெளிமாவட்டத்திலிருந்து ரெயில் மற்றும் பேருந்துகளில் வந்து சேரவேண்டியவர்கள் வந்து சேர்ந்தனர். சென்னையில் வசிப்பவர்களோடு முந்தைய நாளே வந்து சேர்ந்த சுகிர்தராணி, யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஸன், கம்பீரன், இசை ஆகியோர் இணைந்து அடுத்த நாளைய போராட்ட நிகழ்ச்சியைத் திட்டமிட்டார்கள். கோரிக்கைகளை விவாதித்து இறுதிப்படுத்தினார்கள்.

சம்பவம் : 2

போராட்டம் குறித்து பத்திரிக்கைகளில் விளம்பரம் தரவில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கவில்லை. தலைமை, சிறப்பு விருந்தினர்கள் என்று தனியொருவர் எவரையும் முன்னிலைப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 07-ல் கண்டன கவிதைப் போராட்டம் நிகழ்ந்தேறியது. தமிழகம் முழுவதும் இருந்து கவிஞர்கள் தங்களது சொந்த செலவில், சொந்த பொறுப்பில், சொந்த தார்மீகத்தில் வந்து கலந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டியது. இன்குலாப், பாமா போன்ற மூத்த தலைமுறையினரிலிருந்து நிஷாந்தினி, லஷ்மிசரவணக்குமார் போன்ற இளையதலைமுறையினர் வரை தங்களது மனக்கொதிப்பை பதிவு செய்தார்கள். கனிமொழி வந்து கவிதை வாசித்துச் சென்றார். சுகிர்தராணி, கோணங்கி, யவனிகாஸ்ரீராம், ரவிசுப்ரமணியம், யாழன்ஆதி, இன்பா, ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். இறுதியாக வளர்மதி எழுதி பிரசாத், தமிழச்சி ஆகியோர்களோடு இணைந்து இயக்கிய வம்சவதம் என்ற கவிதை நாடகம் ஐநூறிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.

thamizhachi நவீன தமிழ் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்

இங்குள்ள இலக்கிய இதழ்கள், முகாம்கள், முகமைகள், அதிகாரத்தோடு தொடர்புடைய இலக்கிய அமைப்புகள் ஆகியவைகளின் வரம்பெல்லைகளுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் தன்னிச்சையான இக்கூட்டிணைவானது வரலாற்று முக்கியத்துவம் உடையது. வேறொரு இலக்கிய அமைப்போ, இதழோ, வேறொரு இலக்கிய நிகழ்விற்கு இருநூறு கவிஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்றால் பயணம், தங்குதல், உணவு ஆகியவற்றிற்காக மட்டுமே இரண்டு இலட்சம் ரூபாய் செலவு செய்தாக வேண்டியிருக்கும்.

எது எப்படியோ, இலக்கியத்திற்கு வெளியே ஒரு பொதுப்பிரச்சினைக்காக இருநூறு கவிஞர்கள் தங்கள் அத்தனை வேறுபாடுகளுடனும் ஒன்றிணைந்தது மாற்றத்தின் அறிகுறி. இப்போராட்டம் ஒரு இயக்கமாக வடிவெடுத்திருக்கிறது. "நவீன தமிழ்க் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்" என்று இதனைக் குறிப்பிடலாம். இதனை ஒரு ஆரம்பமாகக் கொள்ளலாம். இனி சமூக அரசியல் கலாச்சார தளங்களில் ஏற்படும் பொதுப்பிரச்சினைகளின் மீது சமூகத்தின் மனசாட்சியாய், மனவிழைவாய், சமரசமற்று தங்களது மூர்க்கமான குரலை ஒலிப்பவர்களாக கவிஞர்கள், தங்களை இயக்கமாக உணர்நது சமூகச் செயல்பாடுகளை நோக்கியும் திரள வேண்டும். இந்த ஒன்றிணைவு பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய காட்சிகள்

இம்முறை ஆண்டின் மழைக்காலத்தை சிங்கள அரசு தேர்ந்தெடுத்தது. "பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை ஓயமாட்டோம். இது இறுதிப்போர்" என்று ராஜபக்சே அறிவித்தது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. திருப்பியனுப்பப்பட்ட நார்வே தூதுக்குழு பிரபாகரனோடும், சிங்கள அரசோடும் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை நடத்தியபோது பிரபாகரன் என்பவர் சிங்கள அரசிற்கு யாராக இருந்தார்? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் பிரபாகரனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒருவேளை இந்திய அரசு கோரியதா?. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுடன் ஒப்படைப்பதற்கான போர்தான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றதா? இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலைக்கு காரணமான இன்னொருவரை பிடிக்கத்தான் ஈழத்தமிழ்களின் வாழ்விடங்களின் மீது குண்டுகள் வீசப்படுகிறதா?. பல்லாயிரக்ணக்கான குடியிருப்புகள் அழிக்கப்படுகிறதா?

ஈழத்தமிழர்கள் வாழ்விடமற்று வனப்பகுதியில் முகாம்கள் அமைத்துப் பிழைப்பதற்கும், தங்க இடமற்று இம்மழைக் காலங்களில் பாம்புகளிடம் கடிபட்டு சாவதற்கும், காட்டு மரக்கிளைகளின் தொட்டில்களில் உறங்கும் குழந்தைகளின் இரத்தத்தை அட்டைகள் உறிஞ்சுவதற்கும், பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்படுவதற்கும், உறுப்புகள் இழந்த தமிழ் உடல்களைக் கொட்டிப்போடும் இடமாக வகுப்பறைகள் மாறியதற்கும், முகாம்களில் பசிக்கு ஏந்தப்படும் பாத்திரங்களின் மீது மீண்டும் குண்டுகளைப் போடுவதற்கும், இன்னும் இலங்கை நிலத்திலிருந்து தமிழனத்தை கழுவி வாரி ஊற்றுவதற்கும் சொல்லப்படும் ஒரே காரணம் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பது.

சிங்கள அரசின் கூற்றிற்கு இந்திய அரசின் அதிகாரபூர்வமான பதில் என்ன? சிங்கள இராவணுத்திற்கு பயிற்சிகள் அளிப்பதுவும், தொடர்ந்து பொருளாதார உதவிகள் செய்து வருவதையும் எப்படிப் புரிந்துகொள்வது? இலங்கை அமைச்சர்கள் தமிழக அரசியல்வாதிகளை இழிவாகப் பேசுவதையும், இந்தியாவிலுள்ள இலங்கை தூதரங்களில் விருந்துகள் நடைபெறுகையில் கலந்து கொள்பவர்களையும் அங்கு உருவாகும் சதித் திட்டங்களையும் மத்திய அரசு கண்டும் காணாமல் ஏன் நடந்து கொள்கிறது? மத்திய ஆட்சியில் அதிகாரத்தை பங்கு போட்டிருக்கும் தமிழக கட்சிகளும், தமிழக அரசும், மத்திய அரசிற்கு தங்களால் தரமுடிந்த நெருக்கடி இவ்வளவுதானா?


சம்பவம் 3


சில எதிர் வினைகள்

thamizhachi ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் தமிழ்நாட்டில் தற்பொழுதுதான் ஈழத்தமிழர்கள் குறித்து அரசியல் ரீதியாக பேசும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் உறைந்திருந்த மௌனத்தின் மீது கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகள், என்ன வினையாற்றினார்கள்? இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வை இங்கிருக்கும் தமிழர்களாலோ, கட்சிகளாலோ, படைப்பாளர்களாலோ ஏற்படுத்தி விட முடியுமா?

இங்கு போராட்டம் நடத்துவதாலோ, கூட்டங்கள் போடுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து போகுமா? தமிழகத்தில் எத்தனையோ எரியும் பிரச்சினைகளின்போது அமைதி காத்த படைப்பாளிகள், தலித்துகளின் உடல், வாழ்வு, உடமைகள் மீது அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும்போது, படைப்பாளிகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது பாதுகாப்பானது.

மலேசியாவில் தமிழர்கள் ஒடுக்கப்படும்போது குரல் கொடுக்காத படைப்பாளர்கள் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார்கள்?

தமிழக முதல்வர் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரலை எழுப்பிய பின்னர் இங்கு நடைபெறும் அத்தனை போராட்டங்களும் அரசாங்கத்திற்கு கீழ் நடைபெறுவதுதான்.

தமிழகத்தில் சில காட்சிகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இயக்கங்களை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தொடர்ந்து இயக்கங்கள் நடத்துகிறது.

தமிழகத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை முதல்வரிடம் ஒப்படைக்கிறார்கள்.

தமிழக திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், கூட்டங்கள் போடுகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கைதாகி வெளியில் வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசிடம் அளிக்கிறார்கள். பெருநிதியையும், பொருட்களையும் திரட்டி தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அனுப்புகிறது.

தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், இந்தியப் பிரதமரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

அரசுக்குக் கீழ் வாழ்வதும், அரசின் மனச்சாட்சியை தொந்தரவு செய்வதும்:

ஒரு கவிஞரோ, படைப்பாளியோ, எல்லாரையும்போல அரசுக்குள்தான் பிறக்கிறார்கள். கற்கிறார்கள், வாழ்கிறார்கள். அரசு அளிக்கும் அடையாள அட்டையை பத்திரமாக வைத்து கொண்டு அரசுப் பண்டக சாலைகளில் பொருட்கள் வாங்கி, தின்று, குடித்து வரிசையில் நின்று வாக்களித்து, காவல்துறைக்கு, நீதிமன்றத்திற்கு, அரசியல் சாசன விதிகளுக்குக் கீழ் பிழைத்திருக்கப் பழகுகிறார்கள். மிகுந்த தன்னுணர்வும், விடுதலை வேட்கையும் உடைய இவர்கள்தான் முதலில் அதிகாரங்களை கண்டறிகிறார்கள். அதிகாரம் எங்கிருந்து உருவாகிறது, எவ்வாறு பரவுகிறது, கட்டுப்படுத்துகிறது. எல்லைகளுக்கும் விதிகளுக்கும் கீழ் மந்தைகளை திரட்டி எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதை அறிகிறார்கள். இவர்கள் அதிகாரத்தோடு எப்படி உறவை பேணுகிறார்கள். சிலர் துணை போகலாம், உடந்தையாயிருக்கலாம். ஒரு எல்லை வரை இணங்கி வாழலாம். இணங்கி வாழ்வது போல் பாசாங்கு செய்யலாம். இணங்கி வாழ்ந்து அரசை மக்களுக்கு காட்டிக் கொடுக்கலாம். உள்ளுக்குள் இருந்தே விலகி நிற்கலாம், முரண்டு பிடிக்கலாம், ஊடறுக்கலாம், எதிர்த்து நிற்கலாம், பலியாகலாம். பிறகு அரசுக்கு வெளியே இருந்து செயல்படுவது என்றால் என்ன என்பதைச் சொல்ல வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நமக்கு அரசியல் சாசன விதிகளில் இடமில்லை. அது ஒரு பெருங்கனவும் கூட.

டிசம்பர் 07-ல் நடைபெற்ற கவிதைப் போராட்டம் எங்கு நடத்தவேண்டும், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை நடத்தவேண்டும் என்று நமக்கு அனுமதி அளித்தது காவல்துறை. அரசின் கண்காணிப்பு நிறுவனமான காவல்துறையின் அனுமதிக்குக்கீழ் தேர்ந்தெடுத்துத் தரப்பட்ட இடத்தில், நேரத்தில் அது விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஒரு பந்தலைப் போட்டு அமர்ந்தோம்.

நிபந்தனைகள் இரண்டு

thamizhachi 1. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை பற்றியோ அதன் தலைவரையோ ஆதரித்துப் பேசக்கூடாது.
2. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், ஊறுவிளைவிக்கும்படி குரல் எழுப்பக் கூடாது.

இங்கு கவிஞர்களோ, படைப்பாளிகளோ அதிகாரங்களோடு கொண்டுள்ள உறவில் ஒரே மாதிரித் தன்மையுடையவர்களாக இருக்க முடியாது. முழுவதும் அடங்கிப்போவது முழுவதும் இணங்கிப் போவது என்ற நிலையில் பலரும் இருந்தாலும், இணங்குவது போல் இணங்கி முரண்டுவது, எதிர்க்குரலை வார்த்தைக்குள் மறைத்துப் பதுக்கி வைப்பது, சில நேரங்களில் வெளிப்படையாய் ஒலித்துப் பார்ப்பது என்ற வகையில் ஒரு கலவையான தன்மையுடைதாகத்தான் இருக்கும். அந்தக் கவிதைப் போராட்டத்தின் பந்தலுக்குள் படைப்பாளிகளின் குரலொடுக்கம் நடந்தது. அரசுக்குக் கீழ் அடங்கி ஒலித்தது என்று தட்டையாக்கி கூறுவது பொறுப்பற்ற, பக்குவமற்ற, பொதுப்புத்தி சார்ந்த சமூக இயங்கியலின் மீது எந்தப் புரிதலுமற்ற படைப்பு மனமற்ற குறைபாடுடைய பார்வைதான்.

போராட்டத்திற்கு முன்னரே http://tamilpoets.blogspot.com என்ற முகவரியில் "எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்" என்ற பதிவிலிருந்து சில வார்த்தைகளை இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

"தமிழ் மொழியில் கவிதைகளை எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம். எங்களிடம் அதிகாரம் இல்லை. ஆயுதங்கள் இல்லை. ஆட்சி இல்லை. வார்ததைகள் மட்டுமே உள்ளது. சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். ஈழத்தமிழனத்தின் விடுதலைமீது, வாழ்வுமீது பாராமுகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை நீட்டுவோம்".


ஒரு அமைப்புக்குள், வரம்புக்குள், நிபந்தனைக்குள் எத்தனை குரல் அடங்கி ஒலித்தது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நோய்மையால் பீடிக்கபட்டவன். எத்தனை குரல்கள் அடங்க மறுத்தது, எத்தனை குரல்கள் மீறிப் பிதுங்கியது. அக்குரல்கள் அவ்வொட்டு மொத்தத்தின் மீது என்ன தாக்கம் புரிந்தது. அங்கு சமூகத்தின் மனசாட்சியாய், அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்யும்படி ஒரு குரலேனும் எழாதா என்று ஏங்கியிருப்பதும் அக்குரலை ஒட்டுமொத்தத்தின் பிரதிநிதித்துவமாய் மாற்றுவதும்தான் படைப்பாளியின், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவரின் நேர்மையாக இருக்க முடியும்.

படைப்பாளி பொதுவாக அதிகாரத்திற்கு எதிராக அரசுக்கு முன்னால் விழுந்து சமூகத்தின் மனசாட்சியாகத்தான் தன் குரலை ஒலிக்க வேண்டும். ஈழம் போன்ற பிரச்சினைகளில் அரசு தன் ஆதரவு நிலை எடுக்கும் போது படைப்பாளிகள் உற்சாகமடைந்து களத்தில் இறங்குவது இயல்பானதுதான். ஆனால் தமிழ் மாநிலத்தில் படைப்பாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகளுக்கும் அதிகாரத்திற்கும் உள்ள உறவு விமர்சனப்பூர்வமற்ற வகையில் சில நேரங்களில் அரசின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் போல் இலக்கிய பண்பாட்டுச் செயல்பாடுகள் அமைத்து விடுவது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகும். இந்தக் கூட்டணியோடு சங்கமிக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் இலக்கிய உதிரிகள் மட்டுமே.

செயல்படுவது, மௌனம் காப்பது ஆகிய படைப்பாளியின் செயல்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ அரசால் மட்டுமே வழிநடத்தப்படும் ஒன்றாக இருப்பது அவமானத்திற்குரியது. அச் சமூகத்திற்கு விடுதலை இல்லை. ஆனால் படைப்பாளியின் ஒட்டுமொத்த மன அமைப்பும் அரசின் சமிக்கைகளை ஒட்டியே இயங்கும் தன்மையுடையதாக அமைந்துவிட வாய்ப்பில்லை. மௌனம் காப்பது என்பது மௌனம் காப்பது மட்டுமல்ல. பொறுத்திருப்பது. வாய்ப்பு வரும் வரை இணங்கி இருப்பதுபோல் பாசாங்கு செய்வது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் ஈழத் தமிழர்கள் விடுதலை குறித்தோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ யாருமே பேசாமல் இருந்தார்கள் என்று சொல்லி விட முடியுமா? இன்றுபோல் ஒரு இயக்கமாக இல்லாவிட்டாலும் கூட படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் தங்களுக்குள்ளும் தங்கள் குழுக்களுக்குள்ளும் பேசியும் எழுதியும் தான் வந்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு கிளெஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இப்போது பெரிய அளவில் இன அழிப்பு வேலைகளை சிங்கள அரசு செய்து வருகிறது. 1983க்குப் பிறகு சிங்கள அரசு வெறித்தனமாக மேற்கொண்டிருக்கும் இப்போருக்கான காரணத்தை இந்திய அரசு மேல் சுமத்தியிருக்கிறது. ஒரு படைப்பாளி என்ற அளவில் இல்லா விட்டாலும் கூட இந்தியாவை காரணம்காட்டி தமிழினத்தை அழிப்பதைக் கண்டிக்க ஒரு இந்திய குடிமகன் என்ற அளவில் போதுமான காரணங்களும் நியாயங்களும் இருக்கிறது.

மௌனம் காப்பது என்பது எவ்வாறு மௌனம் காப்பது மட்டும் இல்லையோ அது போலவே செயல்படுவது என்பது அரசோடு அப்படியே சேர்ந்து செயல்படுவது என்று அர்த்தமாகிவிடாது. தமிழக அரசும் கட்சிகளும் 'ஆதரிப்பு வேலைகளை' ஒரு அடையாளம் என்ற வகையில் மட்டுமே செய்து வருகிறது.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பதவி விலகல் கடிதம் வாங்கியது, உண்ணாவிரதமிருந்தது, நிதி திரட்டி அனுப்பியது, பிரதமரிடம் போர் நிறுத்தம் வேண்டி மனுக் கொடுத்தது. இவையெல்லாம் ஒரு ஆதரவு நிலை என்ற செய்தியை சமூகத்திற்கு தெரிவிப்பது என்ற வகையில் மட்டுமே அமைந்துள்ளது.

டிசம்பர் 7ல் நடைபெற்ற கண்டனக் கவிதை போராட்டத்தின் கோரிக்கைகள் மூலமாகவும் அங்கு எழுப்பப்பட்ட கவிதைக் குரல்களின் வழியாகவும் நாம் எவ்வாறு அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்ய விரும்பினோம்.

தமிழக அரசு அதிகாரத்தை பங்குபோட்டுள்ள மத்திய அரசிற்கு "போதுமான நெருக்கடியைத்" தரவில்லை என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன? பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் இப்போரில் கொல்லப்படும் ஈழத்தமிழுயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழ் மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் என்றெல்லாம் எச்சரிக்கத் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சர்களிடமும் வாங்கிய பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்து (ஒரு வேளை ஒரு மாநில அரசு மத்திய அரசோடு பகிர்ந்திருக்கிற ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவது என்ற செயல்பாட்டின் குறியீட்டு அர்த்தம் என்பது என்ன?) மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தால் மத்திய அரசின் செயல்பாடு எப்படி அமைந்திருக்கும்? ஒரு வேளை ஈழத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்குமே.

thamizhachi ஒரு புறம் சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்து கொண்டே, வீடிழந்து, உடமைகள் இழந்து எங்காவது தப்பி உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் (தமிழகத்திற்குள்) அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை விரும்பத்தகாத குடியேற்றங்களாக மத்திய அரசு கருதுகிறது. பிரணாப் முகர்ஜி என்ற மத்திய அமைச்சர் தமிழகத்தில் வரும் போர் கைதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்த பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினார். இதற்குக்கூட எதிர்வினை செய்யமுடியாது தனது இந்திய தேசிய ஒருமைப்பாட்டில் விறைத்து நிற்கிறது தமிழக அரசு.

மேலும் தமிழகத்திலுள்ள அகதி முகாம்கள் வாழும் தகுதியுடையதாக இல்லை. ஈழத்தமிழர்கள் மேல் உண்மையாகவே பற்று இருக்குமானால் இங்குள்ள அகதிகள் வாழ்க்கைக்குரிய உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நீண்டகால அடிப்படையில் தமிழக அரசு திட்டமிடவேண்டும்.

தன் வட எல்லையில் இராணுவத்தை நிறுத்தி "ஒருகைப் பிடி மண்ணை அந்நியன் அள்ளிக்கொண்டு போக விட மாட்டோம்" என்று சபதமிடும் இந்திய அரசிற்கு வடக்கே மட்டும் தான் எல்லையா? இந்திய இலங்கை கடல் எல்லையால் சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்படும் மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? இந்திய கடல் எல்லையில் சிங்கள இராணுவத்தின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசு பொறுப்பேற்று செயல்படவேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டே தவிர்த்து வருகிறது. தமிழ் மக்களுக்கு செய்திகளை மறைப்பதில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் மக்களிடமிருந்து உருவாகும் நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. இன்று எல்லா தமிழக அரசியல் கட்சிகளிடமும் ஒலிபரப்பு வசதி இருந்தும் அங்கு மானும் மயிலும் ஆடுகிறது. ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்டபோது "ஐய்யோ கொல்றாங்க" என்று ஒரு வார காலம் தமிழ் மக்களின் மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உருவாக்கியது. கிளிநொச்சியில் 52000-ற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துபோயுள்ளன. மழைவெள்ளத்தில் 15000 வீடுகள் அழிந்து போயுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் வாழ்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடைசெய்யப்பட்ட கிளெஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. " ஐய்யய்யோ தமிழினத்தையே அழிக்கிறாங்க அழிக்கிறாங்கன்னு" நமது ஊடகங்களில் எதுவுமே ஒலிபரப்பப்படுவதில்லையே அது ஏன்?.

இந்தியாவில் இந்துக்களைக் காப்போம் இராம இராஜ்யத்தை உருவாக்குவோம் என்று அரசியல் செய்து வரும் இந்துத்வா சக்திகளுக்கு இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்று இன்றுவரை தெரியாமல் போனதா? புத்த பிச்சுகளும் இராணுவ சேவையில் ஈடுபடும் அளவிற்கு பௌத்த மத வெறியும் இதில் கலந்திருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாதா? இதுவரை மதவெறியால் கொல்லப்படும் இந்துக்களுக்கு மத அடிப்படையிலாவது ஆதரவாக ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை.

இவ்வாறாக இயன்றவரை இந்தியாவிலுள்ள அனைத்து அதிகாரங்களை நோக்கியும் குற்றம் சுமத்தி விமர்சித்து இந்தப் போராட்டத்தில் கடுமையாக குரல் எழுப்பியிருக்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது என்று நம்மால் அனுமானிக்க இயலவில்லை. நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைத் தடுக்க, தலையிட வேண்டி நம் சார்ந்த அரசாங்கங்களிடம் போராட வேண்டியிருக்கிறது.

கிளெஸ்டர் குண்டுகள்போல் சர்வதேச நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட அழிவுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க, ஈழத்திலிருந்து வாழ விரும்பும் அப்பாவி தமிழ்மக்களைக் கொல்லாதிருக்க, அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதாரங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள, தமிழர்களின் உயிர்வாழ்ந்துகொள்ளும் உரிமையின் மீது மீறல்கள் ஏற்படாதிருக்க, நாம் ஒரு சர்வதேச பார்வையாளர்கள் குழு ஒன்றை நிரந்தரமாக கோருகிறோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருத்தல் நலம். ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பால் இக்குழு ஏற்படுத்தப்பட்டு இலங்கை நிலவரங்கள் குறித்து அவை அளிக்கும் அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இலங்கை அரசு ஏற்று நடக்கும்படியான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் இதை நோக்கிய சர்வதேச கவனத்தை கோரவேண்டும்.

டிசம்பர் 7 - இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கண்டனக் கவிதைப் போராட்டம் இன்னொரு வகையிலும் சிறப்புக்குரியதே. பெண்களால் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுகிருக்கிறது. "நவீன தமிழ் கவிஞர்களின் சுவாதீனமான முதல் கவிதை இயக்கம்" என்று இதைக் குறிப்பிடுவதை பலரும் விரும்பாமல் கூட இருக்கலாம். அப்படிச் சொல்லிப் பார்ப்பது தனிப்பட்ட விருப்பமாக மட்டுமே எஞ்சி நிற்கலாம்.

ஆனால் இந்நிகழ்வுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட கவிஞர்கள் தன்னிச்சையாக திரண்டு கூடியது நல்ல அறிகுறி. இந்த ஒன்றிணைவை பாதுகாத்து இந்தப் போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து செயல்படுவது, பிற சமூக கலாச்சார நடவடிக்கைகளிலும் இயக்கமாய் இடையீட்டை செய்வது அரசு அதிகார மையங்களை அண்டியே வாழாமல் விமர்சனங்களை முன் வைப்பது, அதிகாரங்களுக்கு எதிராக இயக்கமாகி குரல் கொடுப்பது போன்ற முயற்சிகளுக்கு இந்த கண்டனக் கவிதைப் போராட்டம் ஒரு நல்ல ஆரம்பம்.

leena manimekalai
3,brahathambal street,
nungambakkam,
chennai 600034
ph:9841043438


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com